எங்கள் வீட்டில் ரொம்பவே விசேஷமானது வேப்பம் பூ ரசம். ஆனாலும், எங்கள் வீட்டுக் குழந்தைகள் அதை அறவே தவிர்த்து விடுவார்கள். அதனால், அவர்களை ஈர்ப்பதற்காக வித்தியாசமாக என்ன செய்யலாம் என்று யோசித்து வேப்பம்பூவில் சூப் செய்து பார்க்கலாம் என்று முயன்று பார்த்தேன். நானே ஆச்சரியப்படும் வகையில் குழந்தைகள் இதை விரும்பிப் பருகினார்கள். மாதம் இருமுறை கட்டாயம் எங்கள் வீட்டில் வேப்பம்பூ சூப் மணக்கிறது. இதைச் செய்வதும் சுலபம்; உடலுக்கும் நலம்.
சூப் செய்யத் தேவையான பொருட்கள்:
வேப்பம் பூ - 4 டீஸ்பூன், வெண்ணெய் - 4 டீஸ்பூன், காய்கறிகள் வேக வைத்த தண்ணீர் - 1 கப், எலுமிச்சைச் சாறு & 2 டீஸ்பூன், பனங்கற்கண்டு - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
வாணலியில் வெண்ணெய் காய்ந்ததும், அதில் வேப்பம் பூவைப் போட்டு வறுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விடவும். பின்பு இறக்கி ஒரு மெல்லிய துணியில் வடிகட்டவும். இதனுடன் காய்கறிகள் வேக வைத்த தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு கலந்து பருகலாம். கசப்பே இல்லாமல் மிகவும் சுவையாக இருக்கும். அனைத்து வயதினருக்கும் ஏற்ற சூப் இது.
- தீபா பாலசந்தர், சென்னை.
சித்த மருத்துவர் ஆர்.கண்ணன்: ''வேப்பம்பூ வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. முன்பெல்லாம் வேப்பம்பூ, வெல்லம் மற்றும் வாழைப்பழத்தைக் கலந்து சாப்பிடுவார்கள். அதில் சுவை மட்டும் அல்லாமல் சத்தும் நிறைந்திருக்கும். நோயற்ற வாழ்வு வாழ இது போன்ற பழக்கங்களை மீட்டெடுத்தல் நல்லது.''
No comments:
Post a Comment