''உங்களின் முகத்தில் எப்போதும் சிரிப்பு ஒட்டியிருக்கும்... எப்படி அப்படியே மெயின்டெய்ன் செய்கிறீர்கள்?"
''மகிழ்ச்சியாக இருந்தாலே போதும், எந்த வியாதியும் நம்மை அண்டாது. நான் மட்டும் அல்ல, என்னைச் சுத்தி இருக்கிறவங்களும் எப்போதும் மகிழ்ச்சியா இருக்கணும்னு நினைக்கிறவன் நான். இப்படி ஒவ்வொரு நாளும் நானும் மகிழ்ச்சியாக இருந்து மத்தவங்களையும் மகிழ்ச்சிப்படுத்துறதுதான் என்னோட வேலை. மகிழ்ச்சின்னு வார்த்தையால சொன்னால் மட்டும் போதுமா...? மகிழ்ச்சியின் பிரதிபலிப்பு மலர்கின்ற புன்னைகையில்தானே தெரியும்!''
''நீங்களும் கமல் சாரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு... அவர் உங்களுக்குச் சொன்ன ஹெல்த் டிப்ஸ் என்ன?''
''கமல் சார் என்கிட்ட சொன்னதைவிட, அவரைப் பார்த்தே நான் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டு இருக்கேன். அவர் சாப்பிடும் போது, சாதாரணமாக் கூட்டு, பொரியல் வைக்கிற மாதிரியான ஒரு சின்ன கிண்ணத்துலதான் அவர் சாப்பிட வேண்டிய மொத்த சாதமும் இருக்கும். ஆனால், அதேசமயம் நிறையக் காய்கறிகள் சாப்பிடுவார். 'சாதம் வைக்கிற கிண்ணத்துல காய்கறிகளை வெச்சு சாப்பிடணும்; காய்கறிகள் வைக்கிற கிண்ணம் அளவுக்குத்தான் சாதம் சாப்பிடணும்'னு சொல்வார். அதையேதான் நானும் கடைப்பிடிக்கிறேன். அவர் என்கிட்ட அடிக்கடி, 'உடற்பயிற்சி எல்லாருக்குமே ரொம்ப முக்கியம். அதிலும் குறிப்பாக 40 வயசைத் தாண்டினவங்க தினமும் குறைந்தபட்சம் ஒரு பயிற்சியாவது செய்யணும்'னு சொல்வார். 'ஆன்மிகத்துக்கும் யோகாவுக்கும் சம்பந்தம் இல்லை, எல்லோரும் அவசியம் யோகா பண்ணணும்!', 'புரதச் சத்து நிறைந்த உணவுகளை அதிகமா எடுத்துக்கணும்' இதெல்லாம் கமல் சார் எனக்குச் சொன்ன ஹெல்த் டிப்ஸ். கமல் சார் ஒரு கல்லூரி மாதிரி. உணவு தொடங்கி உணர்வு வரைக்கும் எல்லாத்தையும் அவர்கிட்ட இருந்து கத்துக்கலாம்!
''உங்க உணவு முறை எப்படி?''
''நான் எப்போதுமே பசியோட சாப்பிட உட்கார்ந்து, பசியோடவே டைனிங் டேபிள்ல இருந்து எழுந்திடுவேன். தட்டுல குறைவான உணவை வைத்துத்தான் சாப்பிடுவேன். தட்டுல நிறையப் போட்டுக்கிட்டு அப்புறம் சாப்பாடு வீணாயிடுமேன்னு மல்லுக்கட்டி சாப்பிடமாட்டேன்.''
''உடல் ஆரோக்கியம் பற்றி மத்தவங்களுக்கு நீங்க சொல்ல விரும்புவது?
''வள்ளுவர், 'நா காக்க காவாக்கால்...' அப்படின்னு சொன்னது, பேச்சை மட்டும் இல்லை, உணவு விஷயத்தையும் சேர்த்துத்தான். அதை நாம கடைப்பிடிக்கணும். நாற்பது வயதைக் கடந்தவங்க சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், கொழுப்பு இந்த மூன்றும் சரியான அளவில் இருக்கான்னு அடிக்கடி பரிசோதனை பண்ணிக்கனும். சுய வைத்தியம் கூடாது. மருந்து விஷயத்தில் கண்ட பரிந்துரைகளைக் கேட்கக்கூடாது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் கண்டிப்பா ஒரு 'ஃபேமிலி டாக்டர்' இருக்கணும். பல் டாக்டர்கிட்டப் போனாலும்கூட ஃபேமிலி' டாக்டரை ஒருதடவை கன்சல்ட் பண்ணனும். நமக்குன்னு ஏதாவது 'மெடிக்கல் ரெக்கார்ட்ஸ்' இருந்தால் அதை நாம எந்த ஊருக்குப் போனாலும் கூடவே எடுத்துக்கிட்டு போகணும். பசிச்சா சாப்பிடணும். தூக்கம் வந்தால் தூங்கணும்!'' என்றவர் இறுதியாக எல்லோருக்குமான ஆரோக்கிய அறிவுரையாகத் தன் தந்தை பகர்ந்த வார்த்தைகளை நம்மிடம் பகர்ந்தார்.
''ஐம்பது வயசு வரைக்கும் நாம சொல்றதை உடம்பு கேட்கும், ஐம்பது வயசுக்கு மேல உடம்பு சொல்றதை நாம கேட்டே ஆகணும்!''
எவ்வளவு உண்மையான வார்த்தைகள்!
No comments:
Post a Comment